Pages

Sunday 7 November 2010

கீரை பாட்டி

எனக்கு வயது 12.எங்கள் வீதியில் காலை ஏழு மணிக்கெல்லாம் ஆஜராகிடுவார் கீரை பாட்டி.
   "கரிசிலாங்கண்ணி,பொன்னாங்கன்னிகீரே,முருங்கை,அகத்திக்கீரே,கீரே கீரே கீரே "
  இப்படி அவர் சவுன்ட் கொடுத்தால் வீதியே கேட்கும்...பச்சை பசேல் என்ற கீரையும் தலையில் கூடையுமான கீரை பாட்டி தான் சிறு வயது என்று வருகையில் என் மனதில் அடிக்கடி வந்து போகும் படம்.
   கீரை பாட்டி பார்க்க ஐஸ்வர்யமாக இருப்பார்..தலையில் பெரிய கொண்டை அதை சுற்றி கறுப்பு வலையால் கொண்டையை பத்திரமாக கலையாமல் வைத்திருப்பார்..,லேசாக முன்னோக்கி நிற்கும் பல்லும் ,ஒல்லியாக தேகமுமாக அழகாக இருப்பார் பார்க்க.
   ஒருநாள் அடுத்த வீதியில் கீரே கீரே கேக்குது..அம்மாவுக்கு அன்று கீரை வேண்டுமென்பதால் கீரை பாட்டியை மிஸ் பன்னிவிடாமல் நான் முன்னாடியே ஓடி போய் அழைக்க வேண்டும் இல்லையென்றால் அடுத்த ரோட்டுக்க்கு போய்விடுவார்.
  நான் பின்கதவு வழியாக சத்தம் கேட்டு எட்டி பார்த்தேன் கீரை பாட்டியை வர சொன்னேன்.
  அன்றும் வழக்கம் போல் வந்தார்.அம்மா கீரை வாங்கிக் கொண்டிருக்கும்பொழுது பாட்டி கேட்டார்
"என்னாம்ணீ இன்னைக்கி 3 கட்டு கீரை"
"அண்ணன் வந்திருக்கார் பாட்டி..அண்ணனுக்கு கீரை ரொம்ப பிரியம்"சொன்னது அம்மா
"எந்த ஊருலிருந்தம்னி அவிக வந்தது?"
"துபாயிலிருந்து பாட்டி"
"அதேன் கீரைக்காசப்படுறார்..அங்கெல்லாம் வாடி வதங்கி போய் தானே கெடைக்கும்"
"அதெப்படி பாட்டி உங்களுக்கு தெரியும்" நான் கேட்டேன்
"துபாய் போனதில்லம்னீ ஆனா சிஙப்பூர்,மலேஷியா,பேங்காக் போயிருக்கேன்"
"என்ன பாட்டி சொல்றீங்க??" நான் ஆவலுடன்
"ஆமாம்மா தாத்தா இறந்தப்றம் கீரை விக்க வந்துட்டேன் அதுக்கு முன்ன இந்த மூனு ஊரு மட்டுமில்ல நம்ம நாட்டுல நான் சுத்தி பாக்காத ஊரு இல்ல தெரியுமா"
"எப்படி பாட்டி???நான் கேரளா மட்டும் தான் பாத்திருக்கேன்..அங்கெயெல்லாம் எப்படி போணீங்க"
"ப்லைட்டுல தேன்"
"போங்க பாட்டி விடாதீங்க..இதெல்லாம் ரீல் நம்ப மாட்டேன்..நீங்க ஃப்லைட்டுல போணீங்களா"
அசட்டு சிரிப்போடு என் அம்மாவை பார்த்து "புள்ளக்கி சந்தேகம் பாரம்னீ"
"கண்ணு நான் சொன்னா நம்ப மாட்டே..ஃப்லைட்ல ஏறினா தக்காளிப்பளமாட்டம் கொமரிக நம்ப சினிமா நடிகைகள காட்டிலும் அழகா இருப்பாங்க ஃப்லைட்ல முட்டாய் தருவாங்க,சாப்பாடு போடுவாங்க,சிரிச்சு சிரிச்சு பேசுவாங்க..ஃப்லைட்ல பறக்குறப்ப பெரிசா தெரியும் நம்ப வீடெல்லாம் மேல போக போக குட்ட்டியாகிடும்..அப்படியே மேகத்துக்குள்ள ஃப்லைட் பறக்கும்பாரு சினிமாவா நெசமான்னு நம்பவே முடியாது..உம்ம் அதெல்லாம் ஒரு காலம்
  ஆனா கண்ணு அங்கன இருக்கும் டாய்லெட் நல்லா இருக்காது..வெள்ளைக்காரனுகளுக்கு அதான் போல சேர் போட்டாப்ல இருக்கும்.குட்டியா இருக்கும்..அங்கன இங்கன நிண்ணு திரிய எடம் பத்தாது"
"ஃப்லைடல இதெல்லாம் கூட உங்களுக்கு தெரியுமா பாட்டி" நான் நம்பவே இல்லை
"அட பாப்பாவுக்கு சந்தேகம் தீரவே இல்ல " என்று வாய் விட்டு ஒரு சிரிப்பி சிரித்து விட்டு சொன்னார்
"அப்பாருக்கு சொத்து சொகத்துல பஞ்சமே இருக்கல.கணேஸ்(மகன்) பொறந்துதல இருந்து எங்களுக்கு அதிர்ஷ்டம் தான்..ஊருல இருக்குற பல ஏக்கர் நெலம் எங்களுது தான்...அந்த காலத்துல எங்களுக்கு மாச வருமாணம் பல ஆயிரம்..அப்பாருக்கு ஊர் சுத்த ரொம்ப இஷ்டம் அதனால நாங்களும் ஒன்னா நல்லாவே சுத்தியிருக்கோம்
  தாஜ் மஹால் கூட பாத்திருக்கேன்,உங்கூர்ல கூட போய் பல நாள் தங்கியிருக்கோம்..பைய்யன் கனேஸ் நல்லா படிப்பான்.ஒரே மகன்..வூட்டுக்கரருக்கு கொஞ்சம் குடிப்பழக்கம் இருந்தது..லிவர் போயிடுச்சு..அவுரு உடம்பு சரியில்லாம சீக்கிர செத்து போயிட்டாரு..யார் கண்ணு பட்டுச்சோ எப்படியெல்லாமோ எங்கள விதி துரத்த ஆரம்பிச்சுது...ஏக்கர் ஏக்காரா தோப்புக்களை விக்க வேண்டி வந்துச்சு.மிச்ச மீதி எதுவுமில்லாம வித்தோம்..எனக்கான ஒரே சொத்து எம்பைய்யன் கனேஸ் தான்"
இப்ப நான் சற்று மவுனமாகிவிட்டேன்..ஆனால் என் ஆவல் இன்னும் கூடிக் கொண்டே போனது..."இப்ப ஏன் பாட்டி கீரை விக்கிறீங்க"
கண்ணில் தரதரவென கண்ணீர்..நான் கொஞ்சம் பயந்து விட்டேன் ..தப்பா கேட்டுட்டேனோ என்று பயந்து விட்டேன்
என் முகமெல்லாம் மாறியதை கண்டு "பயப்புடாதே கண்ணு..கனேஸ் நல்லா படிப்பான்..சின்ன வயசுல நல்ல கான்வென்ட் ல படிக்க வச்சோம்.அவிக அப்பா இறந்தப்ரம் கவரமன்ட் பள்ளிக் கூடத்துக்கு மாத்திட்டேன்..பைய்யன் எதுவும் சொல்லாம நல்லா படிப்பான்...அவன் பள்ளுகூடத்துல அவந்தேன் எல்லாத்துலயும் ஃபர்ஸ்ட்
  பைய்யனுக்கு வக்கீலாகனும்னு ஆசை...ஆசைக்கேப்பா அவன் ராத்திரி பகலில்லாம படிப்பான்.பட்டப்படிப்பு முடிச்சான் மேற்படுப்பெல்லாம் படிச்சாணாத்தா...
  அன்னிக்கு ஒரு நாள் ஓடி வந்தான் "அம்மா நல்ல வேலை கெடச்சுடுச்சுன்னு..இனி நீ கீரையெல்லாம் விக்காதேன்னான்
  அவன் ப்ரெட்னுக இனிப்பு வேனும்னு கேட்டானுக..எல்லாருக்கும் இனிப்பும் வாங்கி மதியானம் சாப்பாடும் வச்சு ப்ரென்டுகளுக்கெல்லாம் விருந்து வச்சேன்..னைட் வரைக்கும் ப்ரென்டுகளோட அரட்டையடுச்சான்..அடுத்த நாளுக்கு வேலைக்கு சேரனும்..காலைல எழுந்து நேரமா குளிச்சு சாமி கும்பிட்டு புது வேலைக்கனுப்பலாம்னு போணேனாத்தா"
  மறுபடியும் அழுகை..நிசப்தம்
"பாட்டி வேண்டாம் பாட்டி விட்ருங்க"
  என்னை தட்டி தந்து விட்டு "காலைல கட்டில தூங்கிட்டிருந்தவனை எழுப்பினேன்...திரும்பாம படுத்திருந்தான் ...நான் திருப்பி போட்டேன் அவ்வா அவ்வா ந்னு என்னை கூப்பிடறான் வாய் வரல...நாக்கு சுருண்டுடுச்சு.கை கால் அசையல..உடம்பெல்லாம் மரத்து போச்சு..என்ற கண்ணுக்கென்னாச்சுன்னு எனக்கொண்ணும் புரியல..என்னை விட உசரமான எம்புள்ளைய என் மடியில இழுத்து வச்சுட்டு கத்தினேன்..பக்கத்துலிருந்து ஆளுக கூடி ஆஸ்பத்திரி கொண்டு போணோம்..வாதம்னு சொன்னாங்க..அதோட எல்லா கனவும் தீந்து போனது"
இது சொல்லி முடிக்க நானும் அம்மாவும் அழுதோம்
"இப்ப?" அம்மா தயக்கத்துடன்
"தங்கப்பல் அண்ணாச்சி கட தெரியுமாம்னீ??? அங்கன காலங்காத்தால 7 மணிக்கு ஓரமா ஒக்காந்திருப்பான் அதேன் என் கணேஸ்"
என்னால் நம்ப முடியவில்லை...ஒரு கறுப்பு சட்டையும் சில புத்தகங்களுமாக ஒரு கம்பீரமான வக்கீலை நான் கர்ப்பனை செய்து வைத்திருந்தேன்.
 அண்ணாச்சிக்கடையில் நான் பார்த்த கணேஸ் ஒடிந்து போன உருவம்,இழுத்து இழுத்து உடம்பை தள்ளி கொஞ்சம் தூரம் போக முடியும்..என்னவோ பேசுவார்..வழக்கமாக கேட்பதால் தங்கப்பல் அண்ணாச்சிக்கு மட்டும் சிலது புரியும்..நான் அதுநாள் வரை ஏதோ ஒரு மனநோயாளி என்று நினைத்திருந்தேன்"
"இப்ப அம்மான்னு கூப்பிடுவாம்மா..வேறெதுவும் வெளங்காது..வகீலு பேசாம போனா எப்படிம்மா??.ஆனா நான் பெத்தவளாச்சே எம்புள்ள பேச்சு எனக்கு புரியும்..எங்கண்ணு அம்மா நான் ஒரு நா வக்கீலாவேன்னு தான் இன்னிக்கும் சொல்லிகிட்டிருக்கு"
கண்ணை துடைத்து விட்டு மீதி காசை தந்து விட்டு வார்த சிரிப்பை வரவழைத்து விட்டு எழுந்து போய் விட்டார்..

6 comments:

ஆமினா said...

தளி ஒரு கண்ணுக்கு அழுதுட்டேன் டா. கர்ப்பனைகதையா? இல்லை உண்மை சம்பவமா?!

சொல்ல வார்த்தையே வரல. அந்தம்மா எவ்வளவு ஆசை கனவோட இருந்துருக்கும். இனி தன் கஷ்ட்ட காலம் விலகி மீண்டும் பழைய நிலைக்கு போய்விடுவோம் என்ற நம்பிக்கையில் எழுந்த அந்தம்மாவுக்கு மகனின் நிலை பார்த்து எவ்வளவு துடித்திருப்பார்!

தொடர்ந்து எழுந்துங்க தளிகா

kavisiva said...

அழுதுட்டேன் தளிகா :-(. வாழ்ந்து கெடுவது என்பதே கொடுமை. அதிலும் கீரைப்பாட்டியின் நிலைமை.... இந்த மாதிரி நேரங்களில் கடவுள் மீது கோபம்தான் வருகிறது

Jaleela Kamal said...

கீர பாட்டி கத ரொம்ப கலங்க வைக்கிறது தளி....

இமா க்றிஸ் said...

என்ன சொல்வதென்று தெரியவில்லை தளீ. ;((

இலா said...

Heartwrenching...No word could console a mom's sorrow.

தளிகா said...

புதுசாக வந்த ஆமினா இமாவை கண்டு மகிழ்ச்சி...

ஆமினா,கவி,ஜலீலக்கா,இமா மற்றும் இலா உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

இது உண்மை சம்பவம் தான்..ஆனால் சுமார் 15 வருடம் ஓடிவிட்டதால் சில விஷயங்களும் வார்த்தைகளும் நினைஇல் இல்லை அதையெல்லாம் கற்பனையாக சேர்த்திருக்கிறேன்..

மனசுக்கு என்ன கஷ்டம் வந்தாலும் முதலில் நான் அவங்களை நெனச்சுப்பேன்...ஒரு தெம்பு வந்துவிடும்...கீரை பாட்டி ரொம்ப தைரியமான ,மகிழ்ச்சியான பாட்டி..அதனால் நீங்க எல்லாரும் சிரிச்சுகிட்டே வீட்டுக்கு போங்க பாக்கலாம்

Post a Comment